07 டிசம்பர், 2015

வண்ண மீன்கள் வளர்ப்பதும் பராமரிப்பதும்

தூய்மை காத்தல் :  Download Pdf      Download Epub

மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையாதது.

தொட்டியில் உள்ள தண்ணீர், நீர் தேங்கிய இடங்கள், வடிகட்டிகள், சரளைக்கற்கள், அலங்கார செடி கொடிகள், பாசி படிந்த தொட்டி சுவர்கள் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்வதினால் மீன்கள் ஆரோக்கியத்துடன் வாழும் நிலை உருவாகும்.

முக்கியமாக மீன் தொட்டியை சுத்தம் செய்வதற்கு எண்ணெய், சோப்பு, வேறு விதமான ரசாயன சலவை பொருள் போன்றவற்றை கண்டிப்பாக உபயோகப் படுத்துதல் கூடாது. இதனால் மீன்கள் இறந்து போகும்.

மீன்களுக்கு வழங்கும் நறுக்கிய கீரை, முட்டைகொஸ், வெள்ளரிக்காய் போன்ற உயிருணவுகளின் மிச்சங்களை ஒரு மணி நேரத்திற்குள் அப்புறபடுத்த வேண்டும்.

உயிரோட்டமுள்ள செடிகள் சில காரணிகளால் அழுகும் தன்மை உடையவை. உதிர்ந்த இலை தழைகளை அழுக விடாமல் உடனடியாக அப்புறபடுத்துவது புத்திசாலித்தனம்.

பச்சை நிற பாசி ஆரோக்கியமானது. ஆனால் பழுப்பு நிற பாசி சேர்வது, மீன் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை குறிக்கும்.

முக்கியமாக, நீங்கள் காதலிக்கும் உங்கள் அன்பு மீன் இறந்து விட்டால், சிறுதும் யோசிக்காமல், உடனடியாக தொட்டியை விட்டு நீக்கி விட வேண்டும். இவ்வளவு நாள் உங்கள் நண்பனாக இருந்தமைக்கு ஒரு மனப்பூர்வமான நன்றியை உதிர்த்துவிட்டு, அதை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ஏனென்றால், மீன்கள் இறந்த உடனேயே அழுக ஆரம்பிக்கும். இதனால், தொட்டியில் இருக்கும் மற்ற சிறு மீன்கள் பாதிப்படையும்.

மீன் தொட்டியை தூய்மை செய்ய உப்பு மற்றும் பொட்டாசியம் பர்மாங்கனேட் உபயோப்படுத்தலாம்.

மீன் தொட்டியில் இருந்து நீக்கிய அழுக்கு நீரை கீழே கொட்டி விரயம் ஆக்காதீர்கள். உங்கள் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு இந்த நீர் ஒரு பயனுள்ள உரம் ஆகும். ஏனெனில் அதில் மீன் கழிவுகளான நைட்ரஜன் மற்றும் அமோனியா கழிவுகள் அதிகம் உள்ளது. இது செடிகளின் வளர்ச்சியை வேகப்படுத்தும்.

அளவான உணவு :

மீன்கள் உணவு உண்பது, ஆற்றல் தேவை என்பதற்காக மட்டுமே. ஆதலால், மீன்களை தேவைக்கு அதிகமாக ஊட்டினால் மந்த நிலை அடைந்து நாளடைவில் இறந்து போகும்.

அடிக்கடி விளையாட்டாக உணவை தொட்டியில் கொட்டாமல், தினம் ஒரு முறை குறிப்பிட்ட நேரத்தில் உணவளிக்க வேண்டும்.

நாம் வகை வகையாக விரும்பி உண்ணுவதை போல், மீன்களுக்கும் வெவ்வேறு சுவைகளில் கிடைக்கும் உணவுகளை அளிக்க வேண்டும். வாரத்தில் ஐந்து நாள் உலர்ந்த வகை உணவுகளையும், ஒரு நாள் குளிரேற்றிய (அ) உயிருணவையும் கொடுத்து, மீதம் உள்ள ஒரு நாள் உணவே இல்லாமல் பட்டினி கூட போடலாம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும் பல உணவு வகைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

மண்புழு மசாலா:

மண்புழு என்றால் மீன்களுக்கு கொள்ளைப் பிரியம். மார்க்கெட்டில் போய் மண்புழு வாங்கி வந்து போடலாம். வீட்டின் கொல்லைப் புறத்திலேயே கூட மண்புழு வளர்க்கலாம்.

லெட்டூஸ் :

லெட்டூஸ் இலை மீன்களுக்கு சிறந்த சாப்பாடு. மொத்தமாய் வாங்கி வந்து நறுக்கி போடலாம். இதில் ஊட்டச்சத்துக்கள் மீன்களுக்கு ஏற்றவை. சில மீன்களுக்கு லெட்டூஸ் அலர்ஜி ஏற்படுத்திவிடும். அப்பொழுது லெட்டூஸ் கொடுப்பதை நிறுத்திவிடலாம். லெட்டூஸை வேகவைத்தும் கொடுக்கலாம்.

சமைத்த அரிசி :

அரிசியை வேக வைத்து சாதமாக வடித்து மீன்களுக்கு கொடுக்கலாம். மீன்கள் அவற்றை விரும்பி உண்ணும். அதேபோல் பொரி உணவும் கொடுக்கலாம்.

முளை கட்டிய பயறு :

பாசிபயறு, கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகளை முளைகட்டி வைத்து மீன்களுக்கு அளிக்கலாம். இது மீன்களுக்கு புரதச் சத்து நிறைந்த உணவு. இவற்றை வேகவைத்தும் கொடுக்கலாம். பட்டாணியை வேகவைத்து மீன்களுக்கு அளிக்கலாம். அது சரியான ஊட்டச்சத்துணவு.
(வேகவைக்கும் உணவுகளில் உப்பு சேர்க்காமல் செய்யவேண்டும்)

மீன் சதை துணுக்குகள்

மீன்களின் சதை துணுக்குகளை சில மீன்கள் சாப்பிடும். இதனால் மீன்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.
மீன்கள் நீங்கள் கொடுக்கும் உணவினால் நோய்வாய் பட்டுள்ளதா அல்லது ஆரோக்கியமாக உள்ளதா என்பதினை வாரம் ஒரு முறை சோதித்துக்கொள்ளுங்கள்.

மீன் தொட்டியில் உணவை இடும் போது மீன்கள் துள்ளி வந்து உற்சாகமாக சாப்பிட்டால், அவை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக பொருள்.


மீன் இனத்தை தேர்வு செய்தல் :

சரியான மீன் இனத்தை தேர்வு செய்து வளர்ப்பது ஒரு பெரிய சவால் ஆகும். எந்த மீன் இனம் தனித்து வாழும்? எவை கூட்டத்தோடு வாழும்? எந்த இனம் வேறு இனத்தோடு சேரும் என்ற விவரங்களை எல்லாம் சேகரித்து ஆலோசித்து மீன் வாங்கி வளர்த்தால் தான், அவை ஆரோக்கியமாக சந்தோஷமாக நீண்ட நாள் வாழும்.

இட பற்றாக்குறை ஏற்படாத வகையில் கணிசமான தொகையில் மீன் வளர்க்க வேண்டும்.
நம் தமிழகத்திற்கு ஏற்ற நன்னீர் மீன் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
மிக குறைந்த விலை மீன்கள் :
Goldfish,   Guppy,  Zebra Danio
Heart Tetra,  Black Shark,  Molly
Black Molly,  Black Tetra,  
Betta - இது சண்டையிடும் மீன் (தன் இனத்துடன் மட்டுமே சண்டை இடும்)

சற்று விலை அதிகமான மீன் வகைகள்:
Cichlids Gold Severum
Red Parrot 
Neon Tetra
Pearl Gourami
Platy
Angelfish
Cardinal Tetra
Diamond Tetra
Light Tetra

மேலும் சற்று விலை அதிகமான மீன் வகைகள்:
Red-Tailed Shark
Siamese Fighting Fish
Tiger Barb
White Cloud
Blue Gourami

மிகஅதிக விலையுள்ள மீன் வகைகள்:
Flowerhorn
Oscar
Arowana


செடிகளால் காற்றூட்டம் :

மீன் தொட்டியானது, மீன்கள் வாழ்வதற்கு தேவையான பிராணவாயுவை உருவாக்கும் ஒரு சிறந்த இடமாக அமைய வேண்டும். சிறு செடிகள் மீன்களுக்கு புகலிடம் தருவதோடல்லாமல், மீன் தொட்டியின் அழகை எடுத்து காட்டுவதுடன், மீன்களுக்கு தவணை முறையில் பிராணவாயுவை கொடுக்கிறது.

மீன் தொட்டியில் சேரும் அழுக்கை குறைக்க உதவுகிறது.

அது மட்டுமல்லாமல், இலைகளில் படியும் சில வகை பாசிகளை மீன்கள் விரும்பி உண்ணும்.

ஆனால், உயிரோட்டமுள்ள செடி கொடிகளை வைத்து பராமரிப்பது எளிதல்ல. அதற்கு முக்கியமாக பிரகாசமான வெளிச்சமும், நல்ல கரிவளி (Carbon Di-Oxide) மட்டமும் தேவை.

தொட்டியில் ஒரே ஒரு உயிர் செடியையாவது வைத்து வளர்க்கவும்.
மீன் தொட்டியின் வெப்பநிலை எப்போதும் சீராக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
அதாவது பல மீன்களுக்கு குறைந்த வெப்பம் போதுமானது
சில மீன்களுக்கு சற்று அதிகமாக தேவைப்படும் ஆனாலும் நாம் 22 டிகரி முதல் 26 டிகிரி வரை இருக்கும் படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
மழைக்காலத்தில் தான் அதிக கவனமாக இருக்கவேண்டும்.

மழைக்காலத்தில் உணவினை நான்கில் ஒரு பங்கு குறைத்து போடவும். மேலும் வாரத்திற்கு ஒரு முறை பாதி தண்ணீர் மாற்றிவிடவும். அது மழை நீராக இருந்தால் நல்லது. (மழை நேரத்தில் திறந்த வெளியில் வாய் அகலமான சுத்தமான பாத்திரத்தினை வைத்து பிடித்து தொட்டியில் ஊற்றலாம்)

காற்றோட்டத்துடன் சரியான அளவில் ஒளி இருக்கவேண்டும். நீலம் கலந்த வெள்ளை பல்புகள் பயன்படுத்தவேண்டும். மிக அதிகமான ஒளி இருந்தால் தொட்டியில் அதிகமாக பாசி படியும். ஒளி குறைந்தால் மீனின் உடலில் நோய் தொற்றுக்கள் தோன்றுவதுடன் செடிகள் வளராது.
(செடிகள் வளர அதிகமாக காியமில வாயு தேவை அதனை எப்படி உற்பத்தி செய்வது என்பதினை பிறகு பார்ப்போம்)

வாஸ்துப்படி மீன் தொட்டியை எங்கு வைப்பது :

படுக்கையறையிலோ, சமையலறையிலோ, கழிவறையிலோ, மீன்தொட்டி வைக்க கூடாது.

வீடு அல்லது அறையின் கிழக்கு அல்லது வடக்கு சார்ந்த திசையில் வைக்க வேண்டும். வரவேற்பறையின் தென்கிழக்கு மூலையில் வைக்கலாம்.

தொட்டியில் பல நிற மீன்கள் வைத்துக் கொள்ளலாம் என்றாலும் ஒரு கருப்பு நிற மீன் இருக்கவேண்டும். அதுவும் ஒற்றைப்படையில் மீன்களை வாங்கிவிடுவது நல்லது.