16 செப்டம்பர், 2013

செவ்வாய் கிரகத்தில் நீரோட்ட ஆதாரம்?

அண்டார்டிகாவில் உள்ள, மெக்மர்டோ வறண்ட பள்ளத்தாக்கில் உள்ளது டான் ஜுவான் நீர்நிலை.சாக்கடலைக் காட்டிலும் இந்த நீரில் உப்பு அதிகம் உள்ளது, உலகிலேயே அதிக உப்புத் தன்மை உள்ள நீராதாரம் இதுவே, இதனால்தான் துருவப்பகுதியில் இருந்தும் இந்த நீர் உறையாமல் உள்ளது. இந்த நீர் ஆதாரத்தின் தன்மைகளை ஆய்வு செய்கையில் செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் சூட்சுமமாக தெரியவருகிறது என்று அமெரிக்க நிலவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிளவுண்ட, வறண்ட உப்புத் தன்மையிலான மண் விண்வெளியிலிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது. இதனால் இந்தக் குளம் உரையாமல் இருக்கச் செய்வதாக இந்த விஞ்ஞானிகள் புகைப்படங்களை ஆய்வு செய்வதன் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இதனுடன் பனி உருகுவதால் வரும் புதிய நீரும் சேர்கிறது. இதனால்தான் உலகின் துருவக் கடுங்குளிர், பனிப்பகுதியிலும் இந்த நீராதாரம் உறைந்து போகாமல் இருக்கிறது.

இந்த வறண்ட பள்ளத்தாக்குகள் அதில் உள்ள நீராதாரம், செவ்வாய் கிரகத்தில் உள்ள உறை வறட்சிப் பாலைவனம் ஆகியவற்றிற்கு இடையே நிலவியல் ஒற்றுமைகள் இருப்பதற்கான சாத்தியங்களை இந்தப் புகைப்படங்கள் வழங்குகின்றன. இதனால் செவ்வாயில் கடந்த காலத்தில் ஏன் இப்போதும் கூட நீர் இருப்பதற்கான ஆதாரங்களை நாம் நிரூபிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

இது பற்றிக் கூறிய பாஸ்டன் பல்கலை ஆய்வாளர் ஜேம்ஸ் டிக்சன் "இந்த நீரோட்டத்தை கடந்த 2 மாதங்களாக 16,000 புகைப்படங்கள் எடுத்தோம். எந்தப் பக்கமாக நீரோட்டம் இருக்கிறது என்பதை பார்த்தோம். இதனை பிற கண்க்கீடுகளுடன் ஒப்பிட்டோம் அவ்வளவே! என்றார்.

இந்தப் படங்களின் மூலம் தெரியவந்தது என்னவென்றால், தினசரி அதிகபட்ச வெப்ப நிலையில் இந்த நீர்நிலையில் தண்ணீர் துடிப்புகளாக அதிகரித்தது. நண்பகல் சூரியனால் உருகிய பனி நீர் இதற்குக் காரணம். ஆனாலும் இந்த புதிய நீரின் வருகை நீர்நிலையில் அதிகபட்ச உப்புத்தன்மை பற்றி விளக்கிடவில்லை. சாக்கடலை விடவும் 8 மடங்கு உப்புத் தன்மை அதிகம் உள்ளது இந் நீர்நிலை. இதற்கு காரணம் என்னவென்பதை மற்ற புகைப்படங்களை வைத்து ஆராய்ந்துள்ளனர்.

இந்த நீர்நிலையின் மேற்குப்பகுதியில் தளர்வான படிவுகள் இருந்தது இரண்டாவது ஆதரமாக சிக்கியது. இந்த படிவுகளில் கால்சியம் குளோரைடு உப்பு அதிகம் இருப்பது முந்தைய ஆய்வில் தெரியவந்தது.

இரண்டாவது படம் மூலம் காற்றில் சார்பு ரீதியான ஈரப்பதம் வடிந்திறங்கும்போது நீர்ச்சுவடுகள் மண்ணில் உருவானது தெரியவந்தது. பள்ளத்தாக்கில் இருக்கும் இந்த நீர்நிலையின் வடக்கு மலைமுக்ட்டுப் பகுதியிலும் இதேபோன்ற நீர் சுவடுகள் தெரிந்தன. இந்த சுவடுகளை உருவாக்குவது என்னவெனில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை மண் உறிஞ்சுகிறது. நீர்த்திவலைகள் கொண்ட அந்த உப்புகள் தளர்ந்த மண்ணில் மெதுவாக வழிகிறது. அதாவது கீழே உள்ள உறைபனிவரை இந்த நீர்த்திவலைகள் செல்வதை காண முடிகிறது. பிறகு எப்போதாவத் பனி உருகும்போது இந்த உப்பை பள்ளத்தாக்கில் உள்ள நீர்நிலைக்கு எடுத்துச் செல்கிறது.

1961ஆம் ஆண்டு இந்த டான் ஜுவான் நீர்நிலை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் நிலத்தடி நீர்தான் இது என்றே கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த புதிய ஆதாரம் அந்தப் பழைய கோட்பாட்டை உடைத்துள்ளது.

இதனை மாதிரியாகக் கொண்டு செவ்வாய்க் கிரகத்தில் உள்ள குளிரான, வறண்ட பாலைவனங்கள் பற்றி ஊகிக்க வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் கடந்த காலத்திலும் ஏன் இப்போது கூட ஓடும் நீர் செவ்வாய் கிரகத்தில் இருப்பதற்கான ஆதாரத்திற்கு இதனை சாட்சியமாக பயன்படுத்த முடியும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

சமீபமாக செவ்வாய் கிரகத்திலிருந்து வந்துள்ள படங்க்கள் டான் ஜுவான் நீர்நிலையில் கண்டுபிடித்த நடைமுறை இருப்பதற்கான சாத்தியங்களை நிறையவே உருவாக்கியுள்ளது.

சுருக்கமாக அண்டார்டிகாவில் கண்ட அதே டான் ஜுவான் மாதிரி நீர்நிலை செவ்வாயில் இருக்கிறது என்பதே இவர்களது வாதம்.

இந்த கட்டுரை நேச்சர் இதழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.