23 செப்டம்பர், 2013

அவசியமில்லை ஆதார் - உச்ச நீதிமன்றம்!

அவசியமில்லை ஆதார் அட்டை  - அதிரடித்த உச்ச நீதிமன்றம்!ஆதார் அட்டை அத்யாவசியத் தேவைகளுக்கு அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருமணம், சம்பளக் கணக்கு ஆகியவற்றுக்கும் ஆதார் அட்டையை சில மாநில அரசுகள் கட்டாயப்படுத்துவதாகவும், அரசியல் சட்டத்தின் அடிப்படையை மீறுவதால் ஆதார் அட்டை திட்டத்தையே நீக்கம் செய்ய வேண்டும் என்றும் முன்னாள் நீதிபதி ஒருவர்  உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சமையல்  எரிவாயு இணைப்பு போன்றவற்றிற்கும் ஆதாரமின்றி ஆதார் அட்டையைக் கோரும்  சில மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ஆதார் அட்டையை கட்டாயமாக்கக்கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும் ஆதார் அட்டை வழங்கும் தனியாள் அடையாள ஆணையம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
இதுகாறும் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்க இயலாத நிலையில் அரசு உள்ளதையும் சுட்டியுள்ள நீதிபதிகள், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு போன்ற அடிப்படைகள் இல்லாத சட்டவிரோதக் குடியேறிகளுக்கு ஆதார் அட்டை வழங்கக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளனர்.  
நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டை என்பதை ஆதாரமாகக் கோரும் சில மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தலையிடியாக ஆகியுள்ளது.