23 செப்டம்பர், 2013

சிரியா - அமெரிக்கப் போர் நடந்தால் இந்தியாவின் நிலை ????

மூன்றாவது ஆண்டாக சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி நடைபெற்று, இத்தருணம் அது உச்சத்தை அடைந்திருக்கிறது.
 அரபு வசந்தம் எனப்படும் அரசுகளுக்கெதிரான போராட்டங்கள் துனிஷியா தொடங்கி, எகிப்து, ஏமன் என்று அரபகத்தில் ஆட்சி மாற்றங்களுக்கு வழி வகுத்த நிலையில், சிரிய அதிபர் பஷர் அல் அஸ்ஸாத்துக்கு எதிரான கிளர்ச்சி மட்டும் மூன்றாவது ஆண்டை எட்டி உயிர்ப்புடன் உள்ளது - பல அப்பாவி பொதுமக்களைக் கொன்றொழித்தபடி.
இரு நாள்களுக்கு முன் அப்பாவி பொதுமக்கள் மீது இரசாயன ஆயுதப் பிரயோகம் நடத்தி, சுமார் 1,300 அப்பாவி பொதுமக்களை அதிபர் தரப்பு கொன்றொழித்ததாக அமெரிக்க நேசநாடுகள் குற்றம் சாட்டுகின்றன. மறுபுறம் சிரிய அரசுக்கு ஆதரவான ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த இரசாயனத் தாக்குதலை அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்களே நடத்தியதாகக் குற்றம் சாட்டுகின்றன.
இரசாயனத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தி சிரியா மீது எந்நேரமும் அமெரிக்க நேசநாடுகள் தரப்பு குண்டு மழை பொழியலாம் என்ற நிலை தற்போது உள்ளது. அப்படி அமெரிக்கா தன்னைத் தாக்கினால், தான் இஸ்ரேலைத் தாக்கப் போவதாக சிரியா அறிவித்துள்ளது. ஈரானும் சிரியாவுக்கு பக்க பலமாக உள்ளது. இந்நிலையில் இப்போர் மூன்றாம் உலகப் போராக உருப்பெறவும் வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஐ.நா அவையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்கத் தரப்பு, ஈராக் போரை தனக்குச் சாதகமாகத் திருப்பி, உலகநாடுகளை தன் ஆளுமைக்கு கட்டுப்பட வைத்தது போன்றே இம்முறையும் முயலும். அதற்காகவே, எல்பராதி தலைமையிலான ஐநா குழுவொன்று இரசாயன ஆயுதத் தாக்குதல் பற்றி ஆராய சிரியாவுக்குச் சென்றுள்ளது. குறைந்தபட்சம், அக்குழு சிரியாவில் தங்கி இருக்கும் காலம் வரை போர்மேகத்திலிருந்து குண்டுமழை பொழியாது என்று கருதலாம்.
இப்போர் ஏற்பட்டால், இந்தியாவின் நிலை என்னவாகும்? அண்மைக்காலமாக, அமெரிக்க நட்பை விரும்பி வரும் இந்தியா இதிலும் அமெரிக்கச் சார்பு நிலையே எடுக்கும் என்பது ஒருபுறமிருக்க, வீழ்ச்சியடைந்து வரும் இந்தியப் பொருளாதாரம் இப்போரினால் கடும் பாதிப்பை அடையும் என்பது தான் நிதர்சனம்.
பன்னாட்டு அளவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், சிரியா மீதான போர் கச்சா எண்ணெய்த் தட்டுப்பாட்டையும், அதிக விலை உயர்வையும் உண்டாக்கும். நிதிப்பற்றாக்குறை, இறக்குமதிச் செலவினங்கள், மானியச் சுமை ஆகியவற்றால் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டதை விடவும் இரட்டிப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலையேற்றம் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் கடுமையாகப் பாதிக்கும்.
கடந்த மூன்று மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 50 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், சிரியா மீதான போர் மேலும் 50 சதவிகிதம் அதிகரிக்கச் செய்யும். அதாவது, கடந்த மே மாதம் பேரலுக்கு ரூ. ஐந்தாயிரம் என்ற அளவில் இருந்த கச்சா எண்ணெய், இப்போர் காரணமாக ரூ.பத்தாயிரத்தைத் தொட்டுவிடும்.
இதன் விளைவாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் இன்னும் வீழ்ச்சியுறும். பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத் தொகை அதிகரிக்கச் செய்யும். மானியத்தைக் கட்டுப்படுத்த பெட்ரோலியப் பொருட்களை விலையேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். அதனால் பணவீக்கம் பெரிதாகும். பணவீக்கம், அடிப்படை உணவுப் பொருட்களின் விலையேற்றத்துக்கே வழிகோலும்.
ஆக, தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரி கட்டும். அதிகார வர்க்க மோதலில் அல்லலெல்லாம் அடிமட்ட ஏழைக்கே. அது உயிர்ச்சேதமாக இருந்தாலும் அல்லது வாழ்வின் இருப்புச் சோதனை என்றாலும் பாதிக்கப்படப் போவது ஒன்றுமறியா ஏழைகள் தான்.