15 ஜூலை, 2013

சாப்பிடுங்கள் உடல் எடை குறையும்

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் உடல் எடை குறைக்கும் மருந்து சாப்பிட்டுள்ளார். டி.என்.பி என்ற விசத்தன்மையுள்ள வேதிப்பொருள் அடங்கிய மருந்தை சாப்பிட்டதால் அவர் இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. 

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சர்மத் அல்லாதீன் என்ற 18 வயது மாணவன் லண்டனில் உள்ள பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார். உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் உடைய அந்த மாணவர், தனது உடல் எடையைக் குறைப்பதற்காக மருந்துகளை உட்கொண்டுள்ளார். டி.என்.பி என்ற விஷத்தன்மையுள்ள வேதிப்பொருள் அடங்கிய மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், மாத்திரை சாப்பிட்டுவிட்டு அதிகமாக உடற்பயிற்சி செய்த அவர் திடீரென இறந்துவிட்டார். டி.என்.பி மருந்தை சாப்பிட்டதால் அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாணவரின் குடும்பத்தினர் லண்டனுக்கு சென்றுள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கைக்கு பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

இங்கிலாந்தின் உணவுப் பாதுகாப்பு நிறுவனம், இந்த உடல் எடைக் குறைப்பு மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரித்திருந்தது. இந்த மருந்துகளை உட்கொண்டால் வாந்தி, அதிக வியர்வை, மயக்கம், தலைவலி, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற உடல் கோளாறுகளை ஏற்படுத்தி கோமா அல்லது இறப்பு ஏற்படலாம் என்று எச்சரித்திருந்தது.

மாணவர் சர்மத் இறந்ததையடுத்து, உடல் எடை குறைப்பு மருந்துகளால் ஏற்படும் ஆபத்து பற்றி பல்கலைக் கழகம் எச்சரித்துள்ளது.