19 ஜூன், 2012

ஹரப்பா ஒரு எடுத்துக்காட்டு


பருவநிலை மாறுபாடுகள், சுற்றுச்சூழல் மாசுபாடு, உலகம் வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹரப்பா நாகரிகத்தின் அடையாளங்கள் அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெப்பமயத்தால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருவது, ஓசோனில் ஓட்டை உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் தொடர்வதை பல ஆய்வுகள் சுட்டிக் காட்டி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, பண்டைய ஹரப்பா நாகரிகத்தின் அடையாளங்கள் அழிந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளது.
பருவநிலை மாறுபாடுகள், குறிப்பாக குறைவான மழைப் பொழிவால் இந்த அழிவுக்கு ஒரு காரணம் என்று இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள உட்ஸ் ஹோல் ஓஷனோகிராபி நிறுவனம், லிவியு ஜியோசான் தலைமையில் இந்த ஆய்வை நடத்தியது. அதில் கிடைத்த தகவல்கள் ப்ரொசிடிங்ஸ் ஆஃப் நேஷனல் அகடமி ஆஃப் சயின்சஸ் என்ற இதழில் வெளியாகி உள்ளது.
அதன் விவரம், பண்டைய கால வரலாற்று ஆதாரங்களாக திகழ்வதில் ஹரப்பா அடையாளங்கள் மிக முக்கியமானது. இவை அழியும் தருவாயில் இருப்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

இப்பகுதியில் போதிய மழையின்மையால் நீர் மற்றும் நிலவளம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களும், சேகரிக்கப்பட்ட தகவல்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மழை குறைவு மற்றும் வறட்சியே ஹரப்பா அடையாளங்களின் அழிவுக்கும் காரணமாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவநிலை மாறுபாடுகளுக்கு மனித இடையூறுகளே முதல் காரணம் என்பதால் அவற்றை தடுக்க உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலமே ஹரப்பா உள்பட பழங்கால வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாக்க முடியும் என்றும் ஆய்வு அறிக்கையில் வலியுறுத்தப் பட்டுள்ளது.